பெயர் : இரா. மதிவாணன் untold story
பெயர் : இரா. மதிவாணன்
பிறப்பு : 01-07-1936
இடம் : பென்னாகரம், தருமபுரிபுத்தகங்கள் : குளிர்காவிரி-1969, எல்லைப்போர் வில்லுப்பாட்டு-1966, ஒரு பூமாலையின் பாமாலை-2006, குறள் அறிமுகம்-1978, குறள்வழி பிராகிருத இலக்கிய இன்பம்-1978, திருக்குறள் தேனமுதம்-2005, பாவாணார் ஆய்வு நெறி-1990
வகித்த பதவி : சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர், பாறை ஓவிய எழுத்தாளர், சொற்பிறப்பியல் எழுத்தாளர்
விருதுகள் : வரலாற்று ஒளிஞாயிறு விருது
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
இவர் 1936 ஆண்டின் ஜூலை ஒன்றாம் நாளில் தருமபுரி - உகுநீர்க்கல் (ஒகேனக்கல்) சாலையிலுள்ள பென்னாகரத்தில் பிறந்தார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் ஆய்வுப்பட்டங்களும் பெற்றவர். சேலம் அரசினர் கல்லூரியில் பணியாற்றினார்.
வாழ்க்கைச் சுருக்கம் :
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரை இயக்குநராகக் கொண்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்டத்தில் பணியாற்றி ஆராய்ச்சித்திறன் பெற்றவர். அவருடன் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். பாவாணருக்குப் பின்னர் அகர முதலித்திட்டத்தில் இயக்குநராகித் திறமுடன் பல மடலங்களை உருவாக்கினார், சொற்பிறப்பியல் அகர முதலியின் 6 தொகுதிகளை வெளியிட்டார். சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆய்விலும், எழுத்தாய்விலும் உலகப்புகழ் பெற்றவர், நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டவர். வடநாடு முழுவதும், மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா போன்ற பல பகுதிகளில் சொற்பிறப்பியல் மொழி ஆய்வுக்காகப் பயணம் செய்தவர்.
மலேசியத் தமிழ்க் குயில் முனைவர் கா. கலியபெருமாள் அவர்கள் தம் சொந்தச் செலவில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் சிறப்பு சொற்பொழிவுக்கு அழைத்துச் சென்றார். மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தாமும் உடனிருந்து, இவரது பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்தார். ஈப்போவிலுள்ள பாவாணர் தமிழ்மன்றமும் வள்ளலார் ஒளிநெறி மன்றமும் இணைந்து ‘தமிழ்ஞாயிறு’ என்னும் விருது அளித்தன. பாரிட் புந்தர் தமிழ்மன்றம் ‘வரலாற்று ஒளிஞாயிறு’ எனப் பாராட்டி சிறப்பித்தது.
2002 ஆம் ஆண்டில் சிகாகோவிலுள்ள அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, பாவாணர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைத்தது. ‘சிந்துவெளி முத்திரைகளில் உள்ள எழுத்து தமிழே’ என்றும், தென்னாட்டிலிருந்து சிந்து வெளி நாகரிகம் வடநாட்டிலும் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் பரவியது. சிந்துவெளி எழுத்துகள் இந்தியப் பிற மாநில ஒதுக்குப் புறங்களிலும் தென்னாட்டு மக்களின் அன்றாட வாழ்விலும் புழக்கத்தில் உள்ளன. மலைக்குகைகளிலும் பாறை ஓவியங்களிலும் சிந்துவெளி எழுத்துகள் தென்னாட்டில் உள்ளன எனும் உண்மைகளை தன் ஆங்கில நூல்கள் வெளிப்படுத்தியதால் ‘பேருண்மையாளர்’ என்னும் பட்டயமும் விருதும் வழங்கிச் சிறப்பித்தது. அட்லாண்டா, பிளோரிடா, கலிபோர்னியா, தமிழ் மன்றங்களும் பாராட்டிப் பெருமைப்படுத்தின.
Comments
Post a Comment