தலைவர்கள் வரலாறு

               பெயர் : எம்.ஜி.ஆர்

இயற்பெயர் : மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்


பிறப்பு : 17-01-1917

இறப்பு : 24-12-1987

பெற்றோர் : கோபாலமேன், சத்தியபாமா

இடம் : கண்டி, இலங்கை
புத்தகங்கள் : நாடோடி மன்னன்

வகித்த பதவி : அரசியல்வாதி, நடிகர்

விருதுகள் : பாரத் விருது, அண்ணா விருது, பாரத ரத்னா விருது, பத்மஶ்ரீ விருது, வெள்ளியானை விருது


வரலாறு:-வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.

இளமைப்பருவம்:

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

கல்வி உதவி:

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

திரைப்பட வாழ்க்கை:

1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

அவர் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

அரசியல் வாழ்க்கை:

இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார். 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்தது.

இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

திட்டங்கள்:

சத்துணவுத் திட்டம்

விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி

தாலிக்கு தங்கம் வழங்குதல்

மகளிருக்கு சேவை நிலையங்கள்

பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்

தாய் சேய் நல இல்லங்கள்

இலவச சீருடை வழங்குதல் திட்டம்

இலவச காலணி வழங்குதல் திட்டம்

இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்

இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்

வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்


தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல்:

1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார். எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 ஜூன் 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.

1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் ‘தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981’ பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.

சிறப்பு விருதுகளும் பட்டங்களும்:

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

விருதுகள்:

பாரத் விருது - இந்திய அரசு

அண்ணா விருது - தமிழ்நாடு அரசு

பாரத ரத்னா விருது - இந்திய அரசு

சிறப்பு முனைவர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம்,

சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

Comments

Popular posts from this blog

India has high hopes ties with US will deepen under Joe Biden

WOMEN WORK FROM HOME JOB

பணத்தை முதலீடு செய்வது எப்படி?