கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது!

 கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு  விடாது!  



         இரண்டு கைகள், இரண்டு கால்கள், தீர்க்கமான கண்கள் என, மொத்த உறுப்புகளும் நல்ல நிலையில் இயங்கும் திறன் கொண்ட நாம், ஆடும் ஆட்டம் என்ன… பாடும் பாட்டு என்ன… தேடும் வார்த்தை என்ன… ஆனால், இரண்டு கைகளை இழந்து, வாழ்க்கையின் ஓரத்திற்கே சென்று விடும் நிலையில் உள்ளவர்கள், “ஓரமா… அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எங்கள் கவனத்தைக் கூர்படுத்தி, காலால் அல்லது வாயால், ஓவியம் வரைவது மட்டுமே’ என்கின்றனர் சிலர். இதில், பெண்களும் அடக்கம். கேரளா, போத்தனிக்காட்டில் பிறந்தவர் ஸ்வப்னா அகஸ்டின். கைகள் இல்லாமல் பிறந்தவர். அதை இவர், குறையாகவே கருதவில்லை. எல்லா வேலைகளையும் காலாலேயே செய்யப் பழகிக் கொண்டார். எழுதுவது, ஓவியம் வரைவது என, கற்றுத் தெளிந்தார். பள்ளிப் படிப்பின் போது, பெற்றோர், ஆசிரியர்கள், நண்பிகள் என அனைவரின் உதவியையும் பெற்று, படிப்பை முடித்தார். தன் ஓவியங்களை கண்காட்சிகளில் வைத்தார். லதா மஹிந்த்ரா லங்க்டே என்பவர், விபத்தில் கைகளை இழந்தார். மனம் தளராமல், காலால், வாயால் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டு, ஓவியக் கலையில் பட்டப் படிப்பும் முடித்தார்.


சுனிதாவுக்கு, தசைகள் வலுவிழந்து போனதால், கை, 
கால்கள் முற்றிலும் செயலிழந்தன. 
தன் வாயை மூலதனமாகக் கொண்டு, ஓவியங்களை 
வரைந்து தள்ளுகிறார். இவர்களைப் போல, 
இந்தியாவில் இன்னும் சில ஆண், பெண், சிறுவர், 
சிறுமியர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் 
பாசத்துடன் அரவணைத்து, இவர்கள் ஓவியங்களை 
சந்தைப்படுத்தி, வாழ்க்கையை சுயமரியாதையுடனும் 
தன்னம்பிக்கையுடனும் நடத்த, மும்பையைச் சேர்ந்த 
ஓர் அமைப்பு உதவி வருகிறது. ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் 
என்ற இடத்தில், 1912ல் பிறந்த அர்னுல்ப் எரிக் ஸ்டெக்மேன் என்பவருக்கு, இரண்டு வயதில் முதுகெலும்பில் போலியோ நோய் தாக்கியதால், கைகள் செயல்படும் சக்தியை இழந்தார். ஆனால், சிறு வயதிலேயே அவருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த விருப்பம் இருந்ததால், அவர் அத்திறமையை வளர்த்துக் கொண்டு, கால்களால் ஓவியங்கள் வரை வதில் புகழ்பெற்றார். தன்னைப் போன்ற பிறவி மற்றும் இடையில் மாற்றுத் திறனாளிகளானவர்களை இணைத்து, ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டார்.

கடந்த 1957ல் லிச்டென்ஸ்டீன் நாட்டில், “அசோசியேஷன் ஆப் மவுத் அண்டு பூட் ஆர்ட்டிஸ்ட்ஸ் பெயின்டிங் பீப்பிள்’ (ஏ.எம். எப். பி.ஏ.,) என்ற அமை ப்பை உருவாக்கினார். இன்று அந்த அமைப்பு, 74 நாடுகளில் இயங்கி வருகிறது. இதன் கீழ், 726 மாற்றுத் திறனாளி ஓவியர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்தி, கண்ணியமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில், மும்பையில் இந்த அமைப்பு, 2009ல் துவக்கப்பட்டது. இதில் தற்போது, 15 மாற்றுத் திறனாளிகள் தங்கள் ஓவியத் திறமையை வெளிப் படுத்தி வருகின்றனர். இவர்கள், தங்களது வாய் மற்றும் கால் விரல்களில் பிரஷ்களைக் கொண்டு வரையும் ஓவியங்கள், வாழ்த்து அட்டைகள், காலண்டர்கள், பரிசுப் பொருட்கள், புத்தக அடையாள அட்டைகள், “டி-ஷர்ட்’கள், பொருட்கள் வாங்கும் பைகள் ஆகிய பல்வேறு வடிவங்களில் பொறிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. கலை ரசனையோடு உருவாக்கப்படும் இந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம், நமது மாற்றுத் திறனாளி ஓவியர்கள் தங்களது வாழ்க்கையை கவுரவமான முறையில் வாழ, நாமும் உதவி செய்ய முடியும்.

Comments

Popular posts from this blog

WOMEN WORK FROM HOME JOB

India has high hopes ties with US will deepen under Joe Biden

பணத்தை முதலீடு செய்வது எப்படி?